பெரியகுளத்தில் கிராம மக்கள் சாலை மறியல்

பெரியகுளத்தில் மகளிர் சுகாதார வளாக கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 18:07 GMT

சாலை மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி தெய்வேந்திரபுரம் கிராமம் உள்ளது. இங்கு அரசு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பெரியகுளம்-மதுரை சாலையில் பாரத ஸ்டேட் வங்கி காலனி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் தேசியக்கொடியை வைத்திருந்தனர்.

தடை ஆணை

தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார், கீழவடகரை ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தனிநபர் ஒருவர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கட்டிட பணி மேற்கொள்ள தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால் கட்டிட பணி நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது தடை ஆணையை நீக்கம் செய்வதற்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். கோர்ட்டில் உத்தரவு பெற்று கட்டிட பணி விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் கட்டிட பணி தொடங்கவில்லையென்றால், தொடர் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர். மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்