பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை காலிகுடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை

குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றகையிட்டனர்.

Update: 2022-09-19 19:50 GMT

பரங்கிப்பேட்டை, 

2 மாதமாக குடிநீர் இல்லை

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழத்திருக்கழிப்பாளை ஊராட்சிக் குட்பட்ட சின்னகாரமேடு கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இதை அறிந்த ஊராட்சி நிர்வாகம் டிராக்டர் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கியது. ஆனால் அந்த தண்ணீர் உப்பாக இருப்பதால், குடிநீருக்கு பயன்படுத்த முடியவில்லை.

காலிகுடங்களுடன் முற்றுகை

இது பற்றி அவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சின்னகாரமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலி குடங்களுடன் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து நுழைவு வாயில் கதவை சாத்தி அதிகாரிகளை உள்ளே விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உடனடியாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்