கோவில் அறங்காவலர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
சிவகங்கை அருகே உள்ள கிராம கோவிலுக்கு அறங்காவலர் நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று அறநிலையதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.
அறங்காவலர் நியமனம்
சிவகங்கையை அடுத்துள்ள வானியங்குடியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த கோவிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சம்பந்தம் இல்லாதது என்றும் கிராமத்திற்கு சொந்தமான கோவிலிற்கு சம்பந்தமே இல்லாதவரை அறங்காவலராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முற்றுகை
இதைதொடர்ந்து அக்கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட துணை தலைவர்கள் சுரேஷ்குமார், சுகனேஸ்வரி ஆகியோர் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் உதவி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
போராட்டம் நடத்த முடிவு
இது தொடர்பாக கிராமமக்கள் கூறியதாவது.:-
இந்த கோவில் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டது பல தலைமுறைகளாக கிராம மக்கள்தான் கோவிலை பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அறநிலையத்துறை திடீரென்று அறங்காவலரை நியமித்தது ஏன் என்று தெரியவில்லை. இதுவரை ஒருநாள் கூட அறநிலையத்துறையினர் கோவில் பக்கம் வந்தது கிடையாது. அப்படி இருக்க அவர்கள் எப்படி அறங்காவலரை நியமிக்க முடியும் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.