பாதை வசதி கேட்டு மாணவர்களுடன் வந்து மனு கொடுத்த கிராம மக்கள்

கலெக்டர் அலுவலகத்துக்கு பள்ளி மாணவர்களுடன் வந்து பாதை வசதி கேட்டு கிராம மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-08-22 16:07 GMT

கலெக்டர் அலுவலகத்துக்கு பள்ளி மாணவர்களுடன் வந்து பாதை வசதி கேட்டு கிராம மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், துணை கலெக்டர் ராஜசேகர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 282 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் நத்தம் அருகே நல்லூர் மேற்குகளம் கிராம மக்கள் பள்ளி மாணவ-மாணவிகளுடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நல்லூர் மேற்குகளம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதையை அடைத்துவிட்டனர். இதனால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனை செல்லும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள், வயல் வரப்புகள் வழியாக நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எங்களுக்கு பாதை வசதி செய்து தரவேண்டும், என்று கூறி உள்ளனர்.

ஆட்டோ டிரைவர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலஉரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் உலகநம்பி, பட்டிவீரன்பட்டி புரட்சியாளர் அம்பேத்கர் ஆட்டோ சங்க தலைவர் தங்கபாண்டியன், ஆட்டோ டிரைவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பட்டிவீரன்பட்டியில் வத்தலக்குண்டு-திண்டுக்கல் சாலையில் அ-பிரிவில் ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டி வருகிறோம். இந்த நிலையில் தொல். திருமாவளவன் பிறந்தநாளில் தொழிற்சங்க பெயர் பலகை வைக்க அனுமதி கேட்டும் போலீசார் கொடுக்கவில்லை.

இதற்கிடையே ஆட்டோக்களை அங்கே நிறுத்தி ஓட்டக்கூடாது என்றும், கலெக்டரிடம் அனுமதி பெற்றால் ஆட்டோக்களை ஓட்டலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். எனவே 40 ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி அ பிரிவில் ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், என்று மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்