திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

காந்திஜெயந்திையயொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி பங்கேற்றனர்.

Update: 2022-10-02 19:45 GMT


கிராமசபை கூட்டம்


காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு, ஊராட்சி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் விசாகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, பாலம் வேண்டுதல், பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


சமுதாயக்கூடம்


இதைத்தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-


இது எனது சொந்த கிராமத்தை போன்றதாகும். இங்கு சமுதாயக்கூடம் மற்றும் பெண்களுக்கு சுகாதார வளாகம் கட்டப்படும். வேளாங்கண்ணிபுரம் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டத்தில், ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


சத்திரப்பட்டி


இதேபோல் சத்திரப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் சாரதா சிவராசு தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், துணைத்தலைவர் காயத்ரிதேவி தர்மராஜன், ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், மாவட்ட கவுன்சிலர் சங்கீதா பழனிச்சாமி, சத்திரப்பட்டி ஊராட்சி செயலர் லட்சுமணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


புளியம்பட்டி


தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான ெபாதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


பழனி தாசில்தார் சசிகுமார், துணை தாசில்தார் சஞ்சய்காந்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சுலோசனா சோமு, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சரவணன், ஊராட்சி செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


கணவாய்ப்பட்டி


வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவருமான ரமேஷ் தலைமை தாங்கி பேசினார்.


கூட்டத்தில் வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் கருப்புசாமி, வத்தலக்குண்டு ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் அன்பு, ஒன்றிய கவுன்சிலர் பெனினா தேவி, ஊராட்சி துணைத் தலைவர் செல்வி நாச்சியப்பன், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்