செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-16 08:39 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவுல்பஜார் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்கள் கூறிய குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பரசன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பிரசாத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மனோகரன் கவுல்பஜார் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா இளங்கோவன். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மோகன். ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டு அக்‌ஷயா நகர் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலமையூர் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒரு தீர்மானமாக ஆடுகள் மற்றும் மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு கொட்டகை அமைக்க தீர்மானம் நிறைவேற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே கொட்டகை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கணவர் சரவணன் அவருடன் தகராறில் ஈடுபட்டார்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் பவானி கார்த்திக், மண்ணிவாக்கம் ஊராட்சியில் கஜலட்சுமி சண்முகம், வண்டலூர் ஊராட்சியில் முத்தமிழ்செல்வி விஜயராஜ், ஊனமாஞ்சேரியில் ஊராட்சியில் மகேந்திரன், நெடுங்குன்றம் ஊராட்சியில் வனிதா ஸ்ரீ சீனிவாசன், வேங்கடமங்கலம் ஊராட்சியில் கல்யாணி ரவி, காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் நளினி ஜெகன், பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் பகவதி நாகராஜன், கீரப்பாக்கம் ஊராட்சியில் செல்வசுந்தரி ராஜேந்திரன், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டங்களில் சாலை வசதி, தெரு விளக்கு, இலவச வீட்டு மனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர். இந்த கோரிக்கைகள் கிராம சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆராமுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்