திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவது குறித்தும், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, வேளாண் உழவர் நலத்துறை என்பது உட்பட 16 பொருட்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சப்-கலெக்டர் மகாபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், ராம்குமார், ஏகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை தாங்கினார். அரசு பற்றாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் பட்டமந்திரி முதல் எண்ணூர் காமராஜர் துறைமுகம் வரை உள்ள சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனை தடுக்கும் வகையில் இந்த சாலையில் ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடசென்னை அனல்மின் நிலையம் முதல் மேம்பாலம் முடியும் வரை உள்ள சாலை இருபுறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் குருவிமேடு கிராமத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் தார் சாலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முருகன், அரசு பற்றாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஏடூர் ஊராட்சி. இங்கு பெண் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதியின் தலைமையில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஊராட்சியில் ஏற்கனவே கிராம சபை கூட்டத்தின் போது பல முறை கேட்டும் தீர்மானம் போடப்பட்டும் சாலைகளை சீரமைக்கவில்லை, முறையாக கணக்குகளை சமர்பிக்கவில்லை, தேசிய கொடியை கூட தலைவர் ஏற்றவில்லை, ஊராட்சி மன்ற அலுவலகம் முறையாக திறக்கப்படுவது இல்லை, பெண் தலைவரின் கணவர் அண்ணாமலையின் ஆதிக்கம் ஊராட்சியின் நிர்வாகத்தில் அதிகமாக உள்ளது என புகார் கூறி 3 மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்களுடன் சேர்ந்து வார்டு உறுப்பினர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பெண் தலைவரை சூழ்ந்து கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை கிராம மக்கள் கேட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பாதுகாப்புக்காக அங்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இறுதியாக ஊராட்சி நிர்வாகத்தால் எழுதப்பட்ட தீர்மான நகலில் பொதுமக்கள் யாரும் கையெழுத்து போடவில்லை. கடுமையான பிரச்சினைக்கு பிறகு கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தில் முறையாக வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட வில்லை என புகார் கூறப்பட்டதால் தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாசம் என்பவரின் கணவர் அன்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வார்டு உறுப்பினர் ஒருவரை தாக்க முற்பட்டதால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதே போல தேர்வழி ஊராட்சியின் கிராம சபை கூட்டம் தலைவர் கிரிஜா குமார் தலைமையில் நடைபெற்றது. அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு தேசிய ஊரக வேலைதிட்ட பணியை வழங்கிட கோரி பெண்கள் கிராம சபை கூட்டத்தின் போது வாக்குவாதம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய்த்துறையினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.