மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கிராம நிர்வாக அலுவலர் பலி
குடியாத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கிராம நிர்வாக அலுவலர் பலியானார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48), இவர் மூங்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இனியா. குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பெருமாள் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். உள்ளி கிராமத்திற்கு சற்று தொலைவில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பெருமாளின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.