ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை
பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்
உளுந்தூர்பேட்டை தாலுகா இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தான் கிரையம் பெற்ற நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக இருந்தை கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை சந்தித்தார். அப்போது அவர் பட்டா மாற்றம் செய்து தர ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயராமன் இது குறித்து கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
கையும், களவுமாக பிடிபட்டார்
இதையடுத்து போலீசார் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.2,500 பணத்துடன் ஜெயராமன் இருந்தை கிராமத்துக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனிடம் கொடுத்தார். பணத்தை அவர் கையில் வாங்கியதும் அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையிலான போலீசார் கலைச்செல்வனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னா் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டா மாற்றம் செய்ய ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.