பசுமை தமிழகம் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும்விழா
பசுமை தமிழகம் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பணியை தமிழக சபாநாயகர், அமைச்சர் தொடங்கி வைத்தனர்.
காளையார்கோவில்,
பசுமை தமிழகம் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பணியை தமிழக சபாநாயகர், அமைச்சர் தொடங்கி வைத்தனர்.
பசுமை தமிழ்நாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில், "பசுமை தமிழ்நாடு" இயக்கத்தினை தொடங்கி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட முழுவதும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய மருத்துவக்கழகம் சார்பாக, பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.
தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டுவைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
அப்போது இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளையின் சார்பாக, கல்வி நிறுவனங்களில் 50,000 மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு, காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.
பராமரிப்பு
இதனை முறையாகப் பராமரித்து பசுமையான மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தினை உருவாக்கவும், இதுபோன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்து பசுமையான தமிழகத்தினை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என சட்டமன்ற பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
இதில் தமிழ்நாடு மாநில, ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வானதி, இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் மணிவண்ணன், காமாட்சி சந்திரன், ராசு, குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியன், ராஜேஸ்வரி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய இருதயராஜ், தி.மு.க. மாவட்ட துணை செய லாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட கவுன்சிலர் ஸ்டெல்லா, தி.மு.க. காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியசாமி, யோக கிருஷ்ணகுமார், கென்னடி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.