தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

மாடுகளுக்கு வாய் பச்சை நோய் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-08-16 16:13 GMT

பொள்ளாச்சி

மாடுகளுக்கு வாய் பச்சை நோய் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மாட்டு சந்தை

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று செவ்வாய்கிழமை என்பதால் மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்தது. இருப்பினும் விற்பனை குறையவில்லை. இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-

கடந்த வாரத்தை விட 200 மாடுகள் கூடுதலாக சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. காங்கயம் காளை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், மொரா ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், செர்சி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.

பரிசோதனை

கடந்த சில நாட்களுக்கு முன் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வாய் பச்சை நோய் தாக்கி ஏராளமான மாடுகள் இறந்தன. பொள்ளாச்சி சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்படுவதால் வாய் பச்சை நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

மாடுகளை பரிசோதனைக்கு பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். இந்த நிலையில் பொள்ளாச்சி நகரில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளை வாகனங்களில் கொண்டு சந்தை நடைபெறும் பகுதியில் உள்ள குழாயில் விடுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கீழே சிதறி கிடக்கும் கழிவுகள் மீது மண்ணை போட்டு மூடி விடுகின்றனர். இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

-----------------------

Tags:    

மேலும் செய்திகள்