ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனீ அலிநகரத்தில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு நடத்தினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்து வரும் பணிகளை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திக் தேனி மாவட்டத்துக்கு வந்தார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு செய்தார். அதன்படி, வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளி, வைகைப்புதூரில் உள்ள அங்கன்வாடி மையம், ஆண்டிப்பட்டி அருகே தி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் பிற துறைகளின் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவிகள் விடுதி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகிய இடங்களில் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளின் தரம், அலுவலக செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்து, பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் சாலை உருக்குலைந்து கிடப்பதை சுட்டிக்காட்டியதோடு, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் பங்கேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.