சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

Update: 2022-10-05 18:45 GMT

கொள்ளிடம் அருகே சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.

வித்யார்த்தி ஹோமம்

கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. இதனால் இந்த ஊர் சரஸ்வதிவிளாகம் என்று பெயர் பெற்றுள்ளது.

இக்கோவிலில் சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, நவமி, திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் சரஸ்வதி பூஜை விழாவையொட்டி நேற்று வித்யார்த்தி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

வித்யாரம்பம் நிகழ்ச்சி

தொடர்ந்து குழந்தைகள் கல்வியில் சிறக்கும் வகையில் தர்ப்பை புல்லில் தேனை தொட்டு மந்திரம் ஓதி குழந்தையின் நாவில் எழுதியும், அரிசி போன்ற உணவு தானியத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதவும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது. இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ராஜாராமன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்