திருப்பூர் வாலிபர்களை விரட்டி தாக்கும் வீடியோ வைரல்: பீகாரை சேர்ந்த 2 பேர் கைது

திருப்பூர் வாலிபர்களை விரட்டி தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-01-30 21:35 GMT

திருப்பூர்,

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர்நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தின் முன்பு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் திருப்பூர் வாலிபர்கள் 4 பேரை ஓட, ஓட விரட்டி தாக்குவது போன்ற வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வடமாநில வாலிபர்கள் கையில் கல், பெல்ட், மரக்கிளைகளுடன் ஆக்ரோஷமாக பாய்ந்து திருப்பூர் வாலிபர்களை தாக்க முயற்சிக்கும் அந்த காட்சிகள் திருப்பூர் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 14-ந்தேதி ஒரு பேக்கரியில் வடமாநில தொழிலாளர்களுக்கும், திருப்பூர் வாலிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததுடன், ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்த முயற்சித்ததால் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

2 பேர் கைது

இதையடுத்து சம்பவம் நடைபெற்ற நிறுவனத்தின் முன் பகுதி, அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு உள்ளிட்ட சில இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி நடந்த சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஜத்குமார் (வயது 24), பரேஷ்ராம் (27) ஆகிய 2 பேரை 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் அந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சி மிகவும் தாமதமாக சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி இருந்தாலும், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

இந்த சம்பவம் தொடர்பாக பீகார் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டதன் மூலமாக கடந்த சில நாட்களாக வடமாநிலத்தவர்கள் சம்பந்தமாக நிலவி வந்த ஒரு பதற்றமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்