பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.2 கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
பங்கு சந்தை
விஜயமங்கலத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாம்பே குமார் (வயது 45) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-
நசியனூரை சேர்ந்த ஒரு தம்பதி ஈரோடு-கரூர்ரோட்டில் ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தை சேர்ந்த சிலர் என்னை அணுகி பங்கு சந்தையில் (ஷேர் மார்க்கெட்) முதலீடு செய்தால் தினமும் 5 சதவீதம் லாபம் கிடைப்பதாகவும், எனவே பணத்தை செலுத்தினால் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பதாகவும் கூறினர். இதை நம்பி நானும் கடந்த ஆண்டு ரூ.4 லட்சம் வரை அவர்களிடம் கொடுத்தேன். அதன்பிறகு அவர்கள் பணத்தை என்னிடம் திருப்பி கொடுக்கவில்லை. அவர்களிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.
வாக்குவாதம்
இதேபோல் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி மொத்தம் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக ஈரோடு, நெய்வேலி, சேலம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
அவர்கள் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேர்ந்த சிலர் திரண்டு இருந்தனர். அவர்கள் புகார் அளிக்க வந்தவர்களிடம், "எந்த ஆதாரத்தின் அடிப்படையில் புகார் கொடுத்தீர்கள்", என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு புகார் அளித்தவர்கள் தங்களிடம் உள்ள புகைப்பட ஆதாரங்களை காண்பித்தனர். அதை மார்க்கெட்டிங் நிறுவனத்தை சேர்ந்தவர் அபகரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.