துணைத்தலைவர் தர்ணா

தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தாமதமாக வந்ததை கண்டித்து துணைத்தலைவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2023-09-21 18:45 GMT

தலைஞாயிறு ஒன்றியக்குழு கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தாமதமாக வந்ததை கண்டித்து துணைத்தலைவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

ஒன்றியக்குழு கூட்டம்

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இதன் விவரம் வருமாறு:-

முத்துலட்சுமி (அ.தி.மு.க.): கர்நாடகத்தில் இருந்து உரிய காவிரி நீரை உடனடியாக பெற்று தர தமிழக முதல்-அமைச்சர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஞாணசேகரன் (மா.கம்யூ): கொத்தங்குடி ஊராட்சி தொழுதூர் பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் மகேந்திரன் (இ.கம்யூ): வடுகூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உடனடியாக சரி செய்ய வேண்டும். தலைஞாயிறு பகுதிக்கு காவிரி நீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

நிதிநிலைமைக்கு ஏற்ப

உதயகுமார் (தி.மு.க.) :நாலுவேதபதி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.

கஸ்தூரி (தி.மு.க.) : வெள்ளப்பள்ளம் கடலைக்கடை பஸ் நிறுத்தத்தில் புதிய பஸ் நிழலகம் அமைத்து தர வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்: உறுப்பினர்கள் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

முடிவில் அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி நன்றி கூறினார்.

தர்ணா போராட்டம்

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததை கண்டித்து துணைத்தலைவர் ஜெகதீஷ் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கூட்டத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்