மாணவர்கள் தேசத்தின் பெருமையை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும்- அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேச்சு

மாணவர்கள் தங்களது குடும்பத்தின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும் உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேசினார்.

Update: 2023-02-23 18:45 GMT

காரைக்குடி

மாணவர்கள் தங்களது குடும்பத்தின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும் உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேசினார்.

கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை, தமிழ் துறை சார்பில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2022-ம் ஆண்டிற்கு பெற்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னி ஏர்னாக்ஸின் இலக்கிய படைப்புகளுக்கான கருத்தரங்கம் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வந்தவர்களை ஆங்கிலத்துறை தலைவர் பொன்.மதன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய கிராமப்புற மாணவர்கள் அறிவாற்றல், சிந்தனையில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஒழுக்கம், மன தைரியம், நேர்மறை சிந்தனைகளை பெற்றிருப்பதிலும் நலிந்த சமூக மற்றும் பொருளாதார பின்னணியில் இருந்து வருபவர்கள் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அன்னி ஏர்னாக்ஸ் போன்று மாணவர்கள் தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நோபல் பரிசு

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளில் இருந்து எவ்வளவு அறிவுபூர்வமான மற்றும் இலக்கிய பூர்வமான தரவுகளின் பயன்களை மாணவர்கள் பெற முடியுமோ அவ்வளவு பயன்களை முயற்சி செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற அன்னி ஏர்னாக்ஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டில் லில்போன் என்ற சிறிய கிராமத்தில் கூலி தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன்னை நோபல் பரிசு பெறும் அளவிற்கு உயர்த்திக்கொண்டார்.

அதேபோல மாணவர்களும் குடும்பத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையிலும், தேசத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை ராஜா அரசு கல்லூரி பேராசிரியர் கணேசன், தமிழ்த்துறை தலைவர் ராஜாராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை வள்ளியம்மை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்