நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை:வெளி மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வருகை-அபாயகரமான பகுதிகளில் தங்கி பணியாற்ற ஏற்பாடு

நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து உள்ளார்கள். அவர்கள் அபாயகரமான பகுதிகளில் தங்கி பணியாற்றி உள்ளனர்.

Update: 2023-07-04 14:16 GMT

ஊட்டி

நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து உள்ளார்கள். அவர்கள் அபாயகரமான பகுதிகளில் தங்கி பணியாற்றி உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் நீலகிரியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 124 சதவீதம் கூடுதலாக பெய்தது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி தொடங்கியது.

ஆனாலும் வழக்கமான மழைப்பொழிவு தொடங்கவில்லை. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தயார் நிலையில் தீயணைப்புத் துறை

இந்தநிலையில் தீயணைப்பு துறை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் சத்யநாராயணன் அறிவுறுத்தல்படி, மாவட்ட அலுவலர் அண்ணாதுரை மேற்பார்வையில் நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை பாதிப்புகளை தங்களையும் பாதுகாத்து மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் தீயணைப்பு துறை வசமிருந்த கருவிகளை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி செயல்படுத்தி காட்டினர்.

இதுகுறித்து நிலையை அலுவலர் பிரேமானந்தன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, கூடலூர் ஆகிய 4 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 80 பேர் பணியாற்றி வருகிறோம். நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 32 தீயணைப்பு வீரர்கள் வந்து உள்ளார்கள்.

இவ்வாறு வந்துள்ள தீயணைப்பு துறையினர் அபாயகரமான பகுதிகளில் தங்கி அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் மீட்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக வெள்ளம் ஏற்படும் போதும், மழை பெய்யும் போது தங்களையும் காப்பாற்றிக் கொண்டு மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் பொதுமக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்