திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்சேஷவாகனத்தில் வேணுகோபாலசாமி வீதிஉலாதிரளான பக்தர்கள் தரிசனம்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் வேணுகோபாலசாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் உள்ள பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலசாமி ஸ்ரீ ஜெயந்தி மகோற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி 5-ந்தேதி ஜீயர் மடத்தில் அனுக்ஞை பூஜை நடைபெற்றது. மறுநாள்(6-ந்தேதி) ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலபெருமாள் முத்துபந்தலில் விமானம் புறப்பாடு, அலங்கார திருமஞ்சனம் மற்றும் சேவை சாற்று மறையும், இரவு ஹம்ச வாகனத்தில் வீதி உலா காட்சியும் நடைபெற்றது.
சாமி வீதிஉலா
நேற்று முன்தினம் உறியடி உற்சவமும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீதேகளீசபெருமாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி மூலவர் மற்றும் உற்சவர் அலங்கார திருமஞ்சனம் சேவை சாற்றுமறை நிகழ்ச்சி நடந்து, இரவில் சிம்ம வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளும் உற்சவம் நடந்தது. இதில் ஸ்ரீருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலசாமி எழுந்தருளி, கிழக்கு வீதியில் உள்ள ராஜாகோபுரம் வழியாக வந்து கோபுரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.அதன் பின்னர் மதியம் ஜீயர் மடம் எழுந்தருள் நிகழ்ச்சியும் அலங்கார திருமஞ்சனம் மற்றும் சேவை சாற்றுமறையும், இரவு அனுமந்த வாகனத்தில் சாமி வீதி உலா காட்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தங்க பல்லக்கில் எழுந்தருளுதல்
விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை தங்க பல்லக்கில் சாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், மதியம் அலங்கார திருமஞ்சனமும், இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா காட்சியும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 15-ந்தேதி வரைக்கும் உற்சவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கோவில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் என்கிற கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்களும் உபயதாரர்களும் பக்தர்களும் முன்னின்று செய்து வருகின்றனர்.