பெருந்துறை அருகே பட்டப்பகலில் துணிகரம்: வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபர்; பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்
பெருந்துறை அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் கம்மல் பறித்த வாலிபரை பொதுமக்கள் துரத்தி சென்று பிடித்தனர்.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்த துடுப்பதி சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜீவிதா (28). நேற்று முன்தினம் மதியம் வீட்டில் ஜீவிதா தனியாக இருந்து உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென ஜீவிதாவின் வீட்டுக்குள் புகுந்தார். இதை கண்டதும் ஜீவிதா, யார் நீ? என்று கேட்டு உள்ளார். உடனே அந்த நபர், சட்ெடன்று ஜீவிதாவை கீழே தள்ளியதுடன், கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பறித்துக்கொண்டு ஓடினார். இதில் சுதாரித்துக்கொண்ட ஜீவிதா, 'திருடன், திருடன்,' என சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் துரத்தி சென்று மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், 'அவர் திங்களூர் அருகே உள்ள ஊத்துப்பாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி (33),' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.