வெங்கடேசபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

கீழப்புலியூர் வெங்கடேசபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-27 17:59 GMT

மகா கும்பாபிஷேகம்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தை அடுத்த கீழப்புலியூரில் எழுந்தருளியுள்ள புலியூர் திருப்பதியான ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகம் கடந்த 25-ந்தேதி கோபூஜை, பாலாலய திருவாராதனம், ஸ்ரீமகாசுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. விமான கோபுர கலச திருமஞ்சனம் மற்றும் பிரதிஷ்டை நடைபெற்றது. மாலையில் விஷ்வக் சேனர் ஆராதனம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் திவ்ய பிரபந்த சேவை, யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், முதற்கால ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

புனிதநீர் ஊற்றி அபிஷேகம்

மாலையில் பெருமாள் தாயார் ஸ்நபன திருமஞ்சனம், 2-வது கால யாகசாலை பூஜைகள் சாற்றுமறை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை கும்பகோணம் திவ்யதேச தலமான சாரநாதசுவாமி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ராமன்பட்டர் மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியர் குழுவினர் மகா சாந்திஹோமம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், 9.35 மணிக்கு விமான சம்ப்ரோசனமும், மூலவர் சம்ப்ரோசனமும் நடந்தது. திராவிட வேதமும், சதுர்வேத மந்திரங்களும் முழங்க ராஜகோபுரம், மூலவர் தாயார் சன்னதி கோபுர கலசங்களில் பட்டர்கள் புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.

திருக்கல்யாணம்

கும்பாபிஷேக விழாவில் சென்னை, திருச்சி, பெரம்பலூர், ஈரோடு நகரங்கள், கீழப்புலியூர், வாலிகண்டபுரம், சிறுகுடல், அருமடல், எழுமூர், செங்குணம், முருக்கன்குடி, கே.புதூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் தளிகை அம்சை, பெரியசாற்றுமறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து மகா அன்னதானம் நடந்தது. மாலையில் வெங்கடேசபெருமாள்-தாயார் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பெருமாள் உபயநாச்சியார், ஸ்ரீஉடையவர் திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் தக்கார் மற்றும் ஆய்வாளர், கிராம பொதுமக்கள், கிராம முக்கியஸ்தர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்