வேங்கைவயல் வழக்கு: "சிபிஐக்கு மாற்றினால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுமா"- நீதிபதிகள் சரமாரி கேள்வி

வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

Update: 2023-03-17 11:53 GMT

மதுரை,

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கிய இந்த விவகாரத்திற்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் நீடித்து வருகிறது. இதற்கிடையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. எனவே வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் வழக்கை சிபிஐக்கு மாற்றி என்ன ஆகப்போகிறது?. சிபிஐக்கு வழக்கை மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனிதவளம் இல்லை என்று தெரிவிப்பார்கள். சிபிஐயை விட தமிழ்நாடு காவல்துறையில் போதிய அதிகாரிகள் உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, அந்த வழக்கை விசாரித்த பல அதிகாரிகள் ஓய்வு பெற்று சென்று விட்டனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் பலர் ஓய்வுபெற்று சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் நமது நாட்டில் தான் தொடர்ச்சியாக நடக்கிறது. எந்த விசாரணை அமைப்புகளுக்கு மாற்றினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் மக்களும் இந்த சம்பவங்களை காலப்போக்கில் மறந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இறுதியில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதன் நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.



Full View


Tags:    

மேலும் செய்திகள்