வேங்கைவயல் விவகாரம்: 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-25 07:07 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது. 11 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் காவலர் முரளி ராஜா, முத்துக்காடு கிராமத்தை சேர்ந்த 2 பேர் ஆகிய 3 பேரிடம் மட்டும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் தங்களது ரத்தத்தை சோதனைக்கு தர மறுப்பு தெரிவித்து மருத்துவமனைக்கு வரவில்லை. மேலும் தங்களது வழக்கறிஞர்களிடம் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும், இந்த வழக்கில் தங்களையே குற்றவாளியாக்க முயற்சிப்பதாக 8 பேரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்