வேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-04-26 08:45 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடிக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து நேற்று புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த மாதிரி சேகரிப்புக்கு 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 8 பேரும் ரத்த மாதிரி தர மறுத்துவிட்டனர். அவர்கள் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். எனவே சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டுமின்றி நேற்று ரத்த மாதிரி தர மறுத்த 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்