கும்பகோணத்தில் தற்காலிக தரைக்கடைகளை திறக்க தயங்கும் வியாபாரிகள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் மழை காரணமாக கும்பகோணத்தில் தற்காலிக தரைக்கடைகளை திறக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

Update: 2022-10-12 19:29 GMT

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடர் மழை காரணமாக கும்பகோணத்தில் தற்காலிக தரைக்கடைகளை திறக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்காக பொதுமக்கள் பலவிதமான புதிய ஆடைகள் வாங்குவது, பலகாரங்கள் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அலங்கரிப்பது வழக்கம்.

90 சதவீதம் மக்கள் தீபாவளி பண்டிகைக்கு புதிய ஆடைகளை வாங்குவது வழக்கமான ஒன்று. பொருளாதார வசதி கொண்ட உயர்தர மக்கள் நகரங்களில் உள்ள பெரிய கடைகளில் தங்கள் குடும்பத்துக்கு வேண்டிய துணிகளை வாங்குவார்கள்.

தற்காலிக கடைகள்

நடுத்தர மற்றும் நலிவடைந்த பொருளாதார வசதி கொண்டவர்கள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைக்கடை வியாபாரிகளிடம் தங்களுக்கு தேவையான ஆடைகளை வாங்குகிறார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து துணிகளை வரவழைத்து தற்காலிக தரைக்கடை அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.

இதற்காக கும்பகோணத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன.

தொடர் மழை

தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களே உள்ள நிலையில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதி, சாரங்கபாணி கோவில் கீழ வீதி, மொட்டை கோபுரம், பெரிய கடை தெரு, மடத்து தெரு, பழைய பாலக்கரை, புதிய பஸ் நிலையம், ஹாஜியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக கும்பகோணத்தில் மாலை நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

வியாபாரிகள் தயக்கம்

இந்த மழையினால் தற்காலிக தரைக்கடை அமைக்கும் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. பல்வேறு ஊர்களிலிருந்து கொண்டுவரப்படும் தங்களது துணி வகைகள் மழையினால் சேதமடைந்தால் போட்ட முதலீட்டுக்கு கூட பணம் கிடைக்காமல் மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்நோக்க கூடும் என்ற கவலையில் தற்காலிக தரைக்கடை வியாபாரிகள் உள்ளனர்.

இதனால் கடைகளை திறக்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள். இது குறித்து ஈரோட்டை சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

கும்பகோணத்தைச் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் எங்களுடைய தரைக்கடைகளில் தீபாவளி தோறும் பொருட்களை வாங்குவார்கள். இந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தரைக்கடை வியாபாரத்தை தொடங்க தயார் நிலையில் உள்ளனர். ஆனால் மழை பெய்து வருவதால், பொருட்கள் சேதமடையும் ஆபத்து உள்ளது.

வெறிச்சோடிய கடைகள்

அதனால் நாங்கள் வியாபாரத்திற்கு கொண்டு வந்த பொருட்களை அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் வியாபாரத்திற்கு வைக்க முடியவில்லை. இதனால் எங்களுக்காக அமைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இயற்கை ஒத்துழைத்தால் தான் நாங்கள் வியாபாரம் செய்ய முடியும். மழை பெய்தாலும் வியாபாரம் செய்வதற்கு பாதுகாப்பான கொட்டகைகளை மாநகராட்சி அமைத்து கொடுத்தால் எங்களுக்கு விழாக்கால வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மேலும் மாநகராட்சிக்கும் எங்களால் வரி செலுத்த முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்