வேலூரை தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய மாவட்டமாக கொண்டுவர வேண்டும்

வேலூரை தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய மாவட்டமாக கொண்டு வரவேண்டும் என்று சைக்கிள் வழங்கும் விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

Update: 2022-09-08 18:20 GMT

வேலூரை தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய மாவட்டமாக கொண்டு வரவேண்டும் என்று சைக்கிள் வழங்கும் விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

சைக்கிள் வழங்கும் விழா

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தாசில்தார் எஸ்‌.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகரமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.டி.கோபி வரவேற்றார்.

குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு 144 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முன்னேறிய மாவட்டமாக

இந்த அரசு பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்காக அந்த மாணவிகளையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன். மாணவிகள் சிறப்பாக கல்வியில் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய மாவட்டமாக கொண்டுவர பாடுபட வேண்டும் என கூறினார்.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) லட்சுமி நன்றி கூறினார்.

இதேபோல் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சிவப்பிரகாசம், கீதா, நகரமன்ற உறுப்பினர்கள் மனோஜ், விஜயன், ஹசீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்