வேலூர் போலீசார் கோவை விரைந்தனர்
பாதுகாப்பு பணிக்காக வேலூர் போலீசார் கோவை விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து அமைப்பினர் அலுவலகங்கள், வீடு, வாகனங்களில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடந்து வருகிறது.
இதனை தடுக்கவும், இதில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. ஆனாலும் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது.
குறிப்பாக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சம்பவம் அதிகளவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி அந்த மாவட்டத்தில் வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டவும், அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் இருந்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜா தலைமையில் 15 போலீசார் காலை வேனில் கோவைக்கு விரைந்தனர். அந்த மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு சீராகும் வரை 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.