வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 4-வது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2023-06-25 17:32 GMT

ஜலகண்டேஸ்வரர் கோவில்

வேலூர் கோட்டை வளாகத்தில் வரலாற்று சிறப்பு மற்றும் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி முதல் கும்பாபிஷேகம், 1997-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி 2-வது கும்பாபிஷேகம், 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி 3-வது கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் 4-வது முறையாக கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் கோவில் கட்டிடங்கள், கோபுரங்கள், உட்பிரகாரங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.

அதன்தொடர்ச்சியாக ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கலசங்கள், சாமி, அம்பாள் சன்னதிகளில் உள்ள கொடிமரங்கள் புதுப்பிக்கப்பட்டு தங்கமுலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணிகள் நடந்தது.

அதைத்தவிர கோவிலில் உள்ள வெள்ளிப்பொருட்கள் புதுப்பிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி 20 அடி உயரத்தில் ரூ.2 கோடியே 20 லட்சத்தில் புதிதாக தங்கத்தேர் தயார் செய்யப்பட்டது.

சிறப்பு பூஜை, யாகம்

கோவிலின் உட்பகுதியில் வலதுபுறத்தில் கும்பாபிஷேகத்துக்காக 54 யாக குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. கோட்டை நுழைவுவாயில், கோவில் வளாகம், கோபுரங்கள் மற்றும் வெளி, உட்புறம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இரவு நேரத்தில் மின்விளக்குகள் அலங்காரத்தில் கோவில் கோபுரங்கள், சுற்றுச்சுவர் ஜொலித்தன. மேலும் கோவில் வளாகம், யாகசாலை முழுவதும் வண்ண, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கும்பாபிஷேக விழா கடந்த 21-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து 24-ந் தேதி வரை விக்னேஸ்வர பூஜை, யஜமானர் சங்கல்பம், கணபதி, லட்சுமி, கோ, அஸ்வ, கஜ பூஜைகள், கணபதி, லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனையும், வாஸ்துசாந்தி, பிரவேசபலியும், நவக்கிரக பூஜை ஹோமம்,

சுதர்சன பூஜை ஹோமம், மிருத்சங்கிரஹணம், சாந்திஹோமம், திசாஹோமம், முதற்கால யாகசாைல பூஜை, விசேஷசாந்தி, 2,3-ம் கால யாகசாலை, அனைத்து மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தனம் சமர்ப்பணம், நாடிசந்தானம், தத்வார்ச்சனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகம்

இந்த நிலையில் கும்பாபிஷேக தினமான இன்று காலை 5 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், அவபிருத யாகம், விசேஷ திரவிய ஹோமமும், 9 மணிக்கு 4-ம் கால மகா பூர்ணாஹூதி, பட்டு வஸ்திர சமர்ப்பணம், தீபாராதனை யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.

பின்னர் யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் கலசங்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக ராஜகோபுரம், சிறியகோபுரம், மூலவர் விமானம், புதிய தங்கத்தேர், அனைத்து மூர்த்திகளின் சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

பின்னர் 150-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10.30 மணியளவில் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா ராஜகோபுரத்தில் உள்ள கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். கலவை சச்சிதானந்த சுவாமிகள் மூலவர் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றினார்.

தொடர்ந்து விநாயகர் கோபுரம் தங்கத்தேர், கொடிமரங்கள், அனைத்து மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோவில் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் நின்று கொண்டிருந்த திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய... என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கும்பாபிஷேகத்தன்று கோவில் உள், வெளிபிரகாத்தில் கீழ் மற்றும் மேற்பகுதியில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் இருந்தனர்.

அதைத்தவிர கோவிலின் முன்பகுதியில் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். கலசத்தில் புனிதநீர் ஊற்றும்போது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில், மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள், துர்கா பிரசாத் சுவாமிகள், ஐகோர்ட்டு நீதிபதி ராஜா, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தலீலா, தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபன செயலாளர் சுரேஷ்குமார், உப தலைவரும், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவருமான வெங்கடசுப்பு, பத்மினி ஆப்செட் குணசேகரன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்