போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள் ஈரோடு மேட்டூர் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?; வாகன ஓட்டுனர்கள் குமுறல்

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-07 21:17 GMT

ஈரோடு மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர்.

புதிய மேம்பாலம்

ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக சுவஸ்திக் கார்னர், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் தினமும் பகலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்தாலும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

அரசு ஆஸ்பத்திரி அருகில் மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அதன்பிறகு ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. அதேசமயம் மேட்டூர்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. பிரப்ரோட்டையும், பெருந்துறைரோட்டையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும்போதே மேட்டூர்ரோட்டிலும் புதிய மேம்பாலம் கட்டுவதற்காக மண் பரிசோதனை பணி நடந்தது. ஆனால் பாலம் கட்டும் பணிகள் கைவிடப்பட்டது. எனவே அங்கு புதிய பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஏமாற்றம்

இதுகுறித்து ஈரோடு பஸ் நிலைய ஆட்டோ டிரைவர் கணேசன் கூறியதாவது:-

ஈரோடு மேட்டூர் ரோட்டில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். சாலை குறுகலாக இருப்பதாலும், வாகனங்கள் அதிகமாக செல்வதாலும் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். பெருந்துறைரோட்டில் இருந்து ஈரோடு பஸ் நிலையம் நோக்கி மேட்டூர்ரோட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த பாலம் அமைக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வு காணுவதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா மேம்பாலத்தின் மேல் பகுதியில் ரவுண்டானா அமைத்து ஈரோடு மேட்டூர்ரோடு மற்றும் ஈ.வி.என்.ரோட்டை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும். மேலும், பவானிரோட்டையும், மேட்டூர்ரோட்டையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட வேண்டும். இதேபோல் ஈ.வி.என்.ரோட்டில் மணல்மேடு வரை பாலத்தை நீட்டிக்க வேண்டும். காலிங்கராயன் இல்லம் முதல் திண்டல் வரை மேம்பாலம் அமைக்கும் திட்டம் நிலுவையில் உள்ளது. இதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

தடுப்புச்சுவர்

மேட்டூர்ரோட்டின் மையத்தில் கடந்த சில நாட்களாக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் துணை சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர்ரோட்டில் திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. எனவே தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும். மேம்பாலம் அமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு கணபதிநகரை சேர்ந்த பெருமாள் என்பவர் கூறுகையில், "ஈரோடு மேட்டூர்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் அகில்மேடு வீதி வழியாக திருப்பி விடப்படுகிறது. குறுகலான சாலை என்பதால் அங்கும் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. மேட்டூர்ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டால், அந்த வழியாகவே பஸ்கள் இயக்கப்படும். எனவே மேம்பாலம் கட்டப்பட்டால் மேட்டூர்ரோடு மட்டுமின்றி அகில்மேடு வீதியிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்", என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்