போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள

Update: 2022-12-23 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை

திட்டச்சேரி வழியாக நாகை- நன்னிலம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கும்பகோணம், வேலூர், சென்னை, திருப்பதி என பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.இந்த சாலையில் திட்டச்சேரி கடைத்தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

போக்குவரத்துக்கு இடையூறு

இந்த கடைகளுக்கு கும்பகோணம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் லாரிகள் மூலம் பொருட்களை ஏற்றி வந்து கடைகளுக்கு வினியோகம் செய்கின்றனர். அவ்வாறு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் கடைகளின் வாசலில் நெடுஞ்சாலையில் நிறுத்தி பொருட்களை இறக்குகின்றனர். ஏற்கனவே குறுகலாக உள்ள இந்த பகுதி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அவசர அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொள்கிறது.

நடவடிக்கை

அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்