உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
திருக்கோவிலூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
திருக்கோவிலூர்
விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் ஊழியர்கள் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் வரி செலுத்தாத பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் கூறும்போது, கலெக்டர் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் போலீசார் துணையுடன் அனைத்து பகுதிகளிலும் பெரிய அளவில் குழு குழுவாக வாகன சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளோம். எனவே வாகனங்களுக்கு வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்தவும், அனுமதி பெறாத வாகனங்களுக்கு உடனடியாக அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு அவற்றை புதுப்பிக்க அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.