நவீன வசதிகளுடன் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

தஞ்சை சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நவீன வசதிகளுடன் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-01-30 21:05 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நவீன வசதிகளுடன் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சை ரெயில் நிலையம்

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லவும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லவும் முக்கிய வழித்தடமாக தஞ்சை ரெயில் நிலையம் இருந்தது. இந்த வழித்தடம் மெயின் லைனாக கருதப்பட்டது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே ரெயில்பாதை அமைக்கப்பட்ட பின்னர் தஞ்சை வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.தற்போது தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பைசாபாத், பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்கள்

பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு என்பதால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரெயில்களில் பயணம் செய்யக்கூடிய பயணிகளை ஏற்றி விடுவதற்காகவும், ரெயில்களில் வரக்கூடிய உறவினர்களை அழைத்து செல்வதற்காகவும் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள், கார்களில் வருகின்றனர். அப்படி வரக்கூடிய வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகளை ரெயில் நிலையம் முன்பு ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.இதனால் ரெயில்கள் வரக்கூடிய நேரத்தில் கூட்டநெரிசல் ஏற்படுகிறது. மேலும் ரெயிலடி பகுதியில் உள்ள டீக்கடைகள், சுவீட் கடைகள், மருந்தகம், ஓட்டல்கள், டாஸ்மாக் கடைகளுக்கு வரக்கூடியவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் ரெயிலடி பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

பெரும் பிரச்சினை

தஞ்சை மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இவற்றை தவிர்க்க தஞ்சை காந்திஜிசாலை, தென்கீழ் அலங்கத்தில் உள்ள வணிக வளாகம், அண்ணாசாலை ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சாலையோரத்தில் தான் பெரும்பாலானோர் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.தஞ்சை மாநகருக்குள் வாகன நெருக்கடியை தவிர்க்க வாகன நிறுத்தப்பகுதியில் பல அடுக்குடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சுற்றுலா தளமாக திகழ்வதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அதிகளவில் வருகிறது.

வாகன நெருக்கடியில் திணறுகிறது

தஞ்சை மாநகருக்குள் வழக்கமாக ஓடும் உள்ளூர் வாகனங்களுடன் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் ஓடுவதால் தஞ்சையானது வாகன நெருக்கடியினால் திணறுகிறது. தஞ்சை மாநகரில் மட்டும் ஆயிரத்திற்கும் குறையாத இருசக்கர வாகனங்கள், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நாள்தோறும் இங்குள்ள சாலைகளில் ஓடுகிறது. இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் வரக்கூடிய வாகனங்களும் நகருக்குள் ஓடுகிறது. விடுமுறை தினங்களில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலையில் சாலையோரங்களில் இந்த வாகனங்கள் நீண்டநேரம் நிறுத்தப்படுகிறது.எனவே சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் திருச்சி, திருப்பூர் போன்ற மாநகர பகுதிகளில் உள்ளதைபோல் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, திருப்பூர் மாநகர பகுதியில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. வாகனங்களின் எண்ணை கணினியில் பதிவு செய்து ரசீது கொடுக்கின்றனர். மேலும் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழி உள்ளது. லிப்ட் வசதி, கழிவறை வசதி உள்ளது. இப்படி அனைத்து வசதிகளையும் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தை போல் தஞ்சையிலும் கட்ட வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்