விளையாட்டு மைதானத்திற்குள் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்

விளையாட்டு மைதானத்திற்குள் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

Update: 2023-08-05 14:14 GMT

தளி

பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு இடையூறாக இருப்பதால் விளையாட்டு மைதானத்திற்குள் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளையாட்டு மைதானம்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கல்பனா சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டுப்பாட்டில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து, கூடைப்பந்து, ஸ்கேட்டிங், ஆக்கி, கையுந்துபந்து, கிரிக்கெட், இறகுப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு தயாராகும் வீரர்கள் காலை மற்றும் மாலையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் பொதுமக்கள் இரண்டு வேளையும் நடைபயிற்சிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மைதானத்திற்குள் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நிறுத்துபவர்களால் போட்டிக்கு தயாராகும் வீரர்கள் நடைப்பயிற்சியாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

விளையாட்டில் நுழைந்து சாதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பல்வேறு தரப்பட்ட இன்னல்கள் தடைகள் துன்பங்கள் துயரங்களை கடந்தால் தான் சாதிப்பதற்கான வழியே பிறக்கும். அதன்பின்பு அதிலுள்ள நுணுக்கங்களை கற்று தேர்ந்து போட்டிகளில் கலந்து கொண்டு பெருமை கொள்ளும் வகையில் வெற்றிக் கனியை ஈட்டித்தர இயலும். சமீப காலமாக விளையாட்டுக்களின் மீது உள்ள ஆர்வம் காரணமாக பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள் வரை மைதானத்திற்கு வந்து பயிற்சி எடுத்துச் செல்கின்றனர்.

தடை விதிக்க வேண்டும்

ஒரு சிலர் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட மாநில அளவிலான அணிகளுக்கும் தேர்ச்சி பெற்று உடுமலைக்கு பெருமை சேர்த்து உள்ளனர். ஆனால் ஒரு சிலர் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும்போது இடையூறு ஏற்படும் வண்ணம் வாகனத்தை அதிவேகமாக மைதானத்திற்குள் தாறுமாறாக ஓட்டுகிறார்கள். எனவே நேதாஜி விளையாட்டு மைதானத்திற்குள் வாகனங்கள் நுழைவதற்கு முற்றிலுமாக தடை விதிக்க வேண்டும். இதனால் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுகின்ற மற்றும் போட்டிக்கு தயாராகும் வீரர்கள் தங்குதடையின்றி தயார் ஆவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.  

Tags:    

மேலும் செய்திகள்