தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி

ஓவேலி பகுதியில் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-02-09 18:45 GMT

கூடலூர்

ஓவேலி பகுதியில் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

விழிப்புணர்வு கூட்டம்

கூடலூர் தாலுகா ஓவேலி பகுதியில் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தது. இதை தடுக்கக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காட்டுயானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓவேலி பகுதியில் வனத்துறை சார்பில் மனித-வன விலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஓவேலி வனச்சரகர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ரா தேவி, துணைத்தலைவர் சகாதேவன், நியூஹோப் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுலைமான், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

சூரிய மின்வேலி

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காலையில் வழக்கமான நேரத்தை விட சற்று தாமதமாகவும், மாலையில் சற்று முன்னதாகவும் வேலைக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களை பணியிடங்களுக்கு கொண்டு செல்ல தோட்ட நிர்வாகங்கள் பாதுகாப்பான வாகன வசதி செய்து தர வேண்டும். வனம் மற்றும் வருவாய் நிலங்களை தனியாக பிரித்து எல்லையோரம் அகழி மற்றும் சூரிய சக்தி மின்வேலி அமைக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான சாலை, நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதை வனத்துறையினர் தடுக்க கூடாது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கூடலூரில் இருந்து ஆரோட்டுப்பாறை பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் வன உயிரின மேலாண்மை பயிற்சி மைய ஆய்வு மாணவர்கள் டாக்டர் செமீர் மற்றும் பிரியா, வனவர்கள் சுதீர் குமார், சுபைத், வீரமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்