வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Update: 2023-01-29 18:45 GMT

தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.

புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.

கவலை இல்லை

இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்க தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம், வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.

அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

வாகனங்கள் ஏலம்

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா?, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்.

அபராதம் செலுத்த கால நிர்ணயம்

ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க துணைத்தலைவர் நீலகண்டன்:-

காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு வழக்குகளில் வாகனங்களை பிடிக்கிறார்கள். அவ்வாறு பிடிக்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அபராதம் செலுத்தி எடுத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். அதற்கு தவறும் பட்சத்தில் அந்த வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாயை பெருக்கலாம்.

வாகனங்கள் பல ஆண்டுகளாக வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணானால் ஏலம் விடும்போது மிகவும் குறைவான தொகையே கிடைக்கும். அதிக ஆண்டுகள் வாகனங்கள் கிடப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் எடைக்கு தான் போடவேண்டிய நிலை உள்ளது. எனவே பெரிய குற்ற வழக்குகள் நீங்கலாக பிற வழக்குகளில் பிடிபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து விரைந்து அனுப்ப வேண்டும்.

அதிக வருவாய்

கிருஷ்ணகிரியை சேர்ந்த 4 சக்கர வாகனங்கள் வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் ரவி:-

பழைய 4 சக்கர வாகனங்களை நீண்ட காலம் நிறுத்தி, பிறகு அவற்றை ஏலம் விடுவதற்கு பதிலாக குறிப்பிட்ட காலத்திற்கள் அவற்றை ஏலம் விடலாம். இதன் மூலம் அரசிற்கும் அதிக வருவாய் கிடைக்கும். மேலும் போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களும் சுத்தமாக இருக்கும். வாகனங்களை விரைவாக விற்பதன் மூலம் அதற்கு குறைந்த அளவில் செலவு செய்து அவற்றை நீண்ட காலங்கள் பயன்படுத்த முடியும். இதன் மூலம் புதிய வாகனங்கள் வாங்க ஆசை இருந்தும், போதிய நிதி இல்லாதவர்கள் இந்த வாகனங்களை வாங்கி பயன் பெற முடியும்.

சட்டப்பூர்வமாக...

கெலமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ்:-

வாகன பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப ஒரு வழிச்சாலை, பிறகு இருவழிச்சாலை, 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை என்று நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்து விட்டது. வாகனங்களும் லட்சக்கணக்கில் சாலையில்செல்கின்றன.

இந்த சூழ்நிலையில், வழக்குகளில் பிடிக்கப்படும் வாகனங்களை ஆண்டுக்கணக்கில் அப்படியே போடுவதால் அதை பயன்படுத்த முடியாத நிலை வந்து விடுகிறது. கிருஷ்ணகிரியில் சாராய வழக்குகளில் பிடிக்கப்பட்ட வாகனங்கள் தாலுகா அலுவலக வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கின்றன. இது போன்ற வாகனங்களை நீதிமன்றம் மூலமாக விரைவில் அப்புறப்படுத்தி, அந்த பகுதியில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட வேண்டும். பயன்படுத்த முடியாத வாகனங்களையும் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று அப்புறப்படுத்த வேண்டும்.

மண் வளம் கெடுகிறது

ராயக்கோட்டையை சேர்ந்த வக்கீல் விஜய்:-

சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களில் பெரும்பாலானவற்றில் பேட்டரிகள் அப்படியே இருக்கின்றன. இவற்றின் டயர், டியூப்புகளும் உள்ளன. பேட்டரியில் திராவக கசிவு, டயரில் காற்று இறங்கி மண்ணில் புதைவதால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு, நீர்வளமும் கெடுகிறது. வாகனங்களில் பெயிண்டுகள் சிதைந்து அவை துருப்பிடிக்கிறது. இவை அனைத்தும் மண்ணில் சேர்வதால் மண் வளம் கெடுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் பேட்டரி வாகனங்களை பெருமளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. அதற்கு முன்பாக இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்களை உரிய வகையில் அழித்தாலே பெருமளவு மண்வளமும், நீர் ஆதாரமும் காக்கப்படும். அதே போல், ஒவ்வொரு வாகனத்திலும் என்ஜின் எண் மற்றும் 'சேசிஸ்' எண்களை கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் உதவியுடன் வாகனங்களின் உரிய உரிமையாளர்களை கண்டறிந்து கோர்ட்டு உத்தரவுடன் உரியவர்களிடம் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முறையாக பராமரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் வழக்கு தொடர்பான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. வழக்கு தொடர்புடைய வாகனங்கள் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் விடுவிக்கப்படுகிறது. மேலும் சட்டப்படி அவ்வப்போது ஏலமும் விடப்படுகின்றன.

மது விலக்கு குற்றங்களில் பிடிபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறும் வாகனங்கள் பொது ஏலத்திற்கு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் அனைத்து காவல் நிலையங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் முறையாக நிறுத்தப்பட்டு, வழக்கு எண் கொடுக்கப்பட்டு, அவை பராமரிக்கப்படுகிறது.

குறிப்பாக வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. மற்றவை சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்