நாமக்கல்லில் ரத்தசோகை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் ரத்தசோகை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-01 17:51 GMT

நாமக்கல்:

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்துறையின் சார்பில் ரத்தசோகை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசியதாவது:-

ரத்தசோகையானது தன் சுத்தம் பேணுதலில் உள்ள குறைபாடுகள், குடற்புழு, உணவு பழக்கங்களின் குறைபாடுகளால் ஏற்படுகிறது. ரத்தசோகையை தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல், கை கழுவுதல் ஆகியவற்றை சரியாக பின்பற்ற வேண்டும்.

ரத்தசோகை பற்றி பொதுமக்களுக்கு சுவரொட்டிகள், பிரசாரம் ஆகியவை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் வீடுகளுக்கே சென்று உயரத்திற்கு ஏற்ற எடை சரியாக உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும்.

விழிப்புணர்வு வாகனம்

6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரும்புச்சத்து திரவம் வாரம் 2 முறை வழங்கப்படுவதையும், கர்ப்பிணிகளுக்கு தினம்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதையும், வளரிளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை வழங்கப்படுவதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சமுதாய வள பயிற்றுனர்கள் மூலமாக வீடுகளுக்கு சென்று விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ரத்தசோகை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் ரத்தசோகை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தஉள்ளது.

மேலும் செய்திகள்