தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி- கிலோ 2 ரூபாய்க்கு கேட்பதால் பறிக்காமல் விட்ட விவசாயிகள்

தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதால் விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டார்கள்.

Update: 2022-12-23 20:27 GMT

தாளவாடி

தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்தது. கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்பதால் விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டார்கள்.

முட்டைகோஸ்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதி நகர், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளார்கள்.

இப்பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கிலோ 2 ரூபாய்

தற்போது முட்டைகோஸ் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தோட்டத்துக்கே வியாபாரிகள் வந்து காய்களை கொள்முதல் செய்தார்கள். அவ்வாறு வந்த வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸை 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரையே கேட்கிறார்கள். இதனால் விற்க மனமின்றி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அறுவடை கூலிக்கு கூட விலை போகாது என்பதால் முட்டைகோஸை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டார்கள். இதனால் ஒரு சில தோட்டங்களில் காய்கள் அழுகி காணப்படுகின்றன.

நியாயமா?

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'முட்டைக்கோஸ் 3 மாத பயிராகும். ஒரு ஏக்கர் முட்டைக்கோஸ் சாகுபடி செய்ய நாற்று நடுதல், களை எடுத்தல், உரம் என ரூ.80 ஆயிரம் ஆகும். ஒரு கிலோ முட்டைக்கோஸை 10 ரூபாய்க்கு விற்றால்தான் சாகுபடி செலவை எடுக்க முடியும். ஆனால் கடைகளில் கிலோ 20 ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஸை வெறும் 2 ரூபாய்க்கும், 3 ரூபாய்க்கும் கேட்கிறார்கள். தாளவாடி பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. அதனால் முட்டைகோஸ் அதிக அளவில் விளைந்துள்ளது.

விளைச்சலை காரணம் காட்டி விலையை குைறப்பது நியாயமா? அதனால் வேறு வழியின்றி முட்டைகோஸை அறுவடை செய்யாமல் பலர் செடியிலேயே விட்டுவிட்டார்கள். ஒவ்வொரு முறையும் அதிக அளவில் காய்கள் விளைந்தால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. வேளாண்மை துறை இதை தீர்த்துவைத்தால் விவசாயிகளின் கவலை தீரும்' என்றார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்