கார்த்திகை மாத அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.73¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

கார்த்திகை மாத அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.73¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

Update: 2022-11-23 20:56 GMT

சேலம், 

சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தைவிட பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள் விற்பனை நடைபெறும். அதன்படி, நேற்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் அதிகளவில் விற்பனையானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் பூஜைகள் செய்து படையலிடுவதற்காகவும் அதிகாலையில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு சென்று தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கினர். இதனால் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தேங்காய், வாழை இலை, கீரை வகைகள், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனையானது. மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் நேற்று 1,020 விவசாயிகள், காய்கறிகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.73 லட்சத்து 26 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனையானது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை அதிகம் என்று உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்