புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி வீரப்பம்பாளையம் திம்மராய பெருமாள் மலர் ரதத்தில் வீதி உலா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி வீரப்பம்பாளையம் திம்மராய பெருமாள் மலர் ரதத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
எடப்பாடி,
எடப்பாடி அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திம்மராய பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமையைெயாட்டி, நேற்று உற்சவமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. 13-ம் ஆண்டாக நடைபெறும் இந்த வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மூலவருக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் சாமிகள், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மலர் ரதத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த வீதி உலா திம்மராய பெருமாள் மலைக்கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவாக ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வீரப்பம்பாளையம் கொங்கு வேளாளர் சங்க அறக்கட்டளை குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாக்குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.