வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

ஜோலார்பேட்டை அருகே வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-12-11 17:38 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம், அம்மையப்பன்நகர் ஊராட்சி வி.எம்.வட்டத்தில் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோபுரம் அமைத்து விழா நடத்தப்பட்டது. இதனையடுத்து கோவில் நிர்வாக கமிட்டியினர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்தனர். அதன்படி முதன் முறையாக யானை, குதிரை, பசு, காளை கொண்டு வரப்பட்டு, யாகசாலை பூஜை நடந்தது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை அனுக்ஞை, ஆச்சார்ய வர்ணம், திவ்யபிரபந்த பாராயணம் தொடக்கம், வாஸ்து ஹோமம், யாகசாலை பிரவேசம், பாலிகா பிரதிஷ்டை நடைபெற்றது. இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை முதல் கால யாக பூஜை, சங்கல்பம், ரக்‌ஷாபந்தனம், கலாகர்ஷணம், மஹா கும்பஸ்தாபனம், பூர்ணாஹூதி, திவ்யபிரபந்த சாற்றுமறை நடைபெற்றது. மாலையில் ராமர், வீரஆஞ்சநேயருக்கு 81 கலச திருமஞ்சனம், இரண்டாம் கால யாக சாலை பூஜை, கும்ப ஆராதனை, சயனஅலங்காரம், விசேஷ மங்கள இசை நடைபெற்றது.

மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 7.45 மணி வரை கோ பூஜை, விஸ்வரூபம், கும்ப ஆராதனை, 3-ம் கால யாக பூஜை, சாந்திஹோமம், மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. கங்கை, காவிரி போன்ற நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜை செய்த புனித நீரை காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் வீர ஆஞ்சநேயர் விமானம், ராஜ கோபுரத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் யானை மற்றும் குதிரை கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் சப்- கலெக்டர் லட்சுமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகள் எக்ஸெல் ஜி.குமரேசன், கோவை அன்பு, ரைஸ் மில் உரிமையாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்