வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று பெரியகாண்டியம்மன் தேர்பவனி நடக்கிறது.

Update: 2023-02-27 19:31 GMT

வீரப்பூரில் வேடபரி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று பெரியகாண்டியம்மன் தேர்பவனி நடக்கிறது.

மாசி பெருந்திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் கன்னிமாரம்மன் கோவில். இங்கு மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான வேடபரி த நேற்று மாலை நடைபெற்றது. பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் எழுந்தருளினார். குதிரை பூசாரி மாரியப்பன் குடைபிடித்தபடி குதிரை வாகனத்தில் நிற்க பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் குதிரை வாகனத்தை சுமந்து வந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் அமர்ந்து வர பெரிய பூசாரி செல்வம் யானை வாகனத்தில் நின்று வர யானை வாகனத்தை பட்டியூர் கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் யானை வாகனத்தை சுமந்து சென்றனர்.

வாகனங்களுக்கு முன்பு முரசு கொட்டும் காளை செல்ல அதைத் தொடர்ந்து கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான மீனா ராமகிருஷ்ணன், தரனீஷ், ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் கோவில் வழக்கப்படி செல்ல அவர்களை தொடர்ந்து குதிரை, யானை வாகனங்கள் சென்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

வாகனங்களை தொடர்ந்து சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை தங்காள் கரகத்துடன் சென்றனர். மாலை 6.30 மணிக்கு வேடபரி புறப்பட்டு அணியாப்பூர் குதிரை கோவில் சென்று இளைப்பாற்றி மண்டபம் திரும்பியது. அதிகாலை 4 மணிக்கு இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து வாகனங்களில் தெய்வங்கள் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது.

வேடபரி சென்ற வழி நெடுக குடிபாட்டுக்காரர்களும், லட்சக்கணக்கான பக்தர்களும் நின்று பூமாலைகளை வீசி பயபக்தியுடன் வழிபட்டனர். திருவிழாவை ஆசிரியர் திருவாசக விடவை நல்லுசாமி தொகுத்து வழங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து பெரிய தேர்பவனி நடைபெறுகின்றது.

படுகளம்

இதேபோல் படுகளத்தில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை முடிவடைந்தது. நள்ளிரவில் கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருக்க ஒவ்வொருவராக திடீர் திடீரென சாமியாடியபடி கீழே சாய்ந்தனர். கீழே சாய்பவர்களை அங்கு இறை தொண்டாற்றும் ஊழியர்கள் தூக்கி வந்து கோவில் முன்பு வரிசையாக படுக்க வைத்தனர். படுக்க வைத்திருந்த அனைவரும் அசைவற்று கிடந்தனர். இந்த நிகழ்ச்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அதன் பின்னர் அம்மன் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் மற்றும் தீர்த்தம் கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதனிடையே பருவம் அடையாத சிறுமி திடீரென எழுந்து சாமியாடினார். கோவில் பூசாரிகள் தீர்த்தத்துடன் சென்று சிறுமியை அழைத்து வந்தனர். அதன்பின் அந்த சிறுமி கீழ வரிசையாக படுத்திருப்பவர்கள் மீது தீர்த்தத்தை தெளித்ததும் சில மணி நேரம் அசைவற்று கிடந்தவர்கள் துள்ளி குதித்து எழுந்தனர்.இந்த நிகழ்ச்சிதான் அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி ஆகும். தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்களும், பூசாரிகளுமான முனியப்பன், கருப்பண்ணன், வீரசங்கன் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவையொட்டி 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்