கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் காந்தி தெருவில் அமைந்துள்ள ஆரிய வைசிய சமாஜத்திற்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.
விழாவையொட்டி காலையில் புனிதநீர் கலசம் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் பால்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மஞ்சள் அரைத்து அம்மன் உருவம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து, உற்சவர்கள் அம்மன், விநாயகருக்கு மலர் மாலைகள் அணிவித்து வேள்வி பூஜை, வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து அம்மன் முன்பு பெண்கள் மாவிளக்கு தட்டுகளை படைத்தனர். இதில் ஆரிய வைசிய சமூகத்தினர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதனையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் ஊஞ்சல் சேவையும் அதனைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் மற்றும் அனைத்து வயதினரும் கலந்து கொண்ட பல்வேறு போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.