கடைகளில் வித விதமாக குவிந்த கொலு பொம்மைகள்

நவராத்திரி விழாவையொட்டி கடைகளில் விற்பனைக்காக வித விதமாக கொலு பொம்மைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

Update: 2023-09-28 18:45 GMT

நாகர்கோவில்:

நவராத்திரி விழாவையொட்டி கடைகளில் விற்பனைக்காக வித விதமாக கொலு பொம்மைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

நவராத்திரி விழா

சிவபெருமானுக்கு உகந்த தினமாக மகா சிவராத்திரி இருப்பது போல் ஆதிபராசக்திக்கு உகந்த தினங்கள் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி ஆகும். இந்த ஆண்டு நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவையொட்டி இந்துக்கள் தங்கள் வீட்டில் 9 நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவார்கள்.

இதையொட்டி கடைகளில் வித விதமான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வந்துள்ளன. குறிப்பாக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏராளமான கொலு பொம்மைகள் வந்துள்ளன. நாகர்கோவிலில் கோட்டார் வடிவீஸ்வரம், கட்டபொம்மன் சந்திப்பு, வடசேரி சந்திப்பு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மை விற்பனை தொடங்கி உள்ளது.

விதவிதமான பொம்மைகள்

இந்த பகுதிகளில் மீனாட்சி சுந்தரேசுவரர், சக்கரத்தாழ்வார், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, சிவன், வராகி அம்மன், கற்பக விநாயகர், ராஜகணபதி, முருகன், சரஸ்வதி, பெருமாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பல்வேறு கடவுள் பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ராமர், சீதை, வயதான தாத்தா, பாட்டி பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், சரவண பொய்கை, சிவபெருமான் புட்டுக்கு மண்சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், விவசாயத்தை பிரதிபலிக்கும் பொம்மை செட்டுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களின் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பொம்மைகள் அனைத்தும் களிமண் மற்றும் காகித கூழ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ரூ.100 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தசரா திருவிழா

இதுபோல் குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து காளி, துர்க்கை உள்பட பல்வேறு சாமிகளின் வேடமணிந்து ஊர்வலமாக செல்வார்கள். இதையொட்டி கோட்டார் கம்பளம் பகுதியில் கடைகளில் மாலை மற்றும் வேடமணியும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் பக்தர்கள் வாங்கி செல்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்