நிரம்பி வழியும் வரதமாநதி அணை

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பழனி வரதமாநதி அணை நிரம்பியது.

Update: 2022-06-05 13:46 GMT

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர், பாசன ஆதாரமாக திகழ்வது பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இன்றி காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் பழனி வரதமாநதி அணை முழுகொள்ளளவான 66 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 50 கனஅடி நீர் வரத்து ஆகிறது. அணை நிரம்பியதால், வரத்தாகும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து வெளியேறும் நீரை பார்த்து ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அணை பகுதிக்கு வருகின்றனர். பின்னர் அணை பகுதியில் நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

அதேவேளையில் வாரவிடுமுறை நாட்களில் அணையை பார்வையிட பழனி சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக அணை பகுதியில் உள்ள பூங்கா புதர் மண்டி கிடக்கிறது. எனவே சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்