மயிலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கவேண்டும் வன்னியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மயிலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கவேண்டும் என வன்னியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலம்,
மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டில் வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட தலைவர் புகழேந்தி வரவேற்றார். பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், அருள், மணி, ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக வன்னியர் சங்கத்தின் மாநில தலைவர் புதா.அருள்மொழி, முன்னாள், வன்னியர் சங்க துணைத் தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மயிலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும். ஆமை வேகத்தில் நடைபெறும் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வல்லத்தில் நடைபெற்று வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சிக்கு மிக அருகில் அமைத்து கொண்டிருக்கும் சுங்கச்சாவடியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், பருவமழை, மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பழனி, அரிகிருஷ்ணன், ராஜாராம், செங்கேணி, செல்வமணி, அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.