வாணி கல்வி நிறுவனங்கள் ஆண்டு விழா
வாணியம்பாடி வாணி கல்வி நிறுவனங்கள் ஆண்டு விழா நடந்தது. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்றனர்.
வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வாணி சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் வாணி கல்வியியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சந்திரசேகரன், வாணி சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சாந்தி, வாணி கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பிரபாத்குமார் ஆகியோர் ஆண்டறிக்கை வாசி்த்து, வரவேற்றனர். அறக்கட்டளை துணைத் தலைவர் எம்.கோபால், பொருளாளர் பி.நடராஜன், செயலாளர் கந்தசாமி, செயலாக்க அறங்காவலர் பூபதி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளையும், சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார். அப்போது நான் ஒரு சாதாரண கிராமத்தில் இருந்து படித்து அதிக மதிப்பெண்களை பெற்று இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு மாணவரும் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். தற்போது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தமிழில் பேச தெரியாத நான் தமிழில் பேச வேண்டும் என்று உறுதி கொண்டு, தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பேசி வருவதால் தான் எளிதாக தமிழ் பேச முடிந்தது. நீங்களும் தன்னம்பிக்கையுடன் நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்து, தொடர்ந்து போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் வாணி கல்வி அறக்கட்டளை துணை செயலாளர்கள் ராஜா, கருணாநிதி, சக்கரவர்த்தி, தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.