வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா
வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கட்டிடம் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாணாபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தண்டராம்பட்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பரிமளா கலையரசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ''தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், முதல் பெண் பிள்ளைகளின் பட்டப்படிப்பு படிப்பதற்கு ஏதுவாகவும் அவர்கள் சிரமமின்றி எதிர்காலத்தில் படிப்பை தொடர்வதற்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் தொடர அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம்'' என்றார்.
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல்
அதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பார்வதி சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், கூட்டுறவு இணை பதிவாளர் நடராஜன், திட்ட இயக்குனர் (மகளிர்), சையதுசுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.