சேலத்தில் வேன் தீயில் எரிந்து நாசம்
சேலத்தில் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.
சேலம்:
சேலத்தில் வேன் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.
கோடை விழா
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை பார்க்க தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் (வயது 35), இவருடைய நண்பர் நியாஸ் (30) ஆகிய இருவரும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக ஒரு வேனில் ஏற்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வேனை சத்யராஜ் ஓட்டினார். சேலம் மத்திய சிறையை தாண்டி சென்ற போது வேனில் இருந்து திடீரென புகை வந்தது.
தீயில் எரிந்து நாசம்
இதை பார்த்ததும் சத்யராஜ் வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் இருவரும் வேனை விட்டு கீழே இறங்கினர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வேன் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வேன் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.