சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது

மயிலாடுதுறை அருகே சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர்தப்பினர்.

Update: 2023-04-22 19:15 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை அருகே சாலையோர பள்ளத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர்தப்பினர்.

பள்ளத்தில் கவிழ்ந்தது

மயிலாடுதுறை அருகே கிளியனூரில் ஒரு தனியார் கேட்டரிங் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ரம்ஜான் பண்டிகைக்காக ஆர்டரின் பேரில் பிரியாணி செய்து எடுத்துக்கொண்டு ஊழியர்கள் 3 பேர் ஆம்னி வேனில் சென்றனர். நீடூரில் பிரியாணியை கொடுத்துவிட்டு ஆம்னிவேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.மயிலாடுதுறை அருகே திருவாரூர் சாலையில் பேச்சாவடி என்ற இடத்தில் ஆம்னிவேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஸ்டியரிங் லாக் ஆனதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி வேன் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

தீப்பிடித்தது

அப்போது ஆம்னிவேனில் இருந்த சுதாகர் என்பவர் வெளியேறினார். ஆனால் டிரைவர் முகமதுமசூத், ஜெயராமன் ஆகிய 2 பேரும் வேனின் உள்ளே சிக்கி கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று ஆம்னி வேனை தூக்கி இருவரையும் மீட்டனர். அப்போது திடீரென ஆம்னிவேனில் தீப்பிடித்தது. இ்ந்த தீ மளமளவென பரவி ஆம்னி வேனின் டயர்கள் வெடித்து சிதறின. மேலும் ஆம்னிவேன் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தீயணைப்பு வீரர்கள்

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆம்னிவேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் சம்பவ இடத்தில் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.டிரைவர் முகமது மசூத் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆம்னிவேனில் தீப்பிடித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்