வால்பாறை சுகாதார நிலைய டாக்டரிடம், துணை இயக்குனர் விசாரணை

சரிவர பணிக்கு வரவில்லை என்று புகார் எழுந்ததை தொடர்ந்து, வால்பாறை சுகாதார நிலைய டாக்டரிடம், துணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.

Update: 2022-11-09 18:45 GMT

வால்பாறை

சரிவர பணிக்கு வரவில்லை என்று புகார் எழுந்ததை தொடர்ந்து, வால்பாறை சுகாதார நிலைய டாக்டரிடம், துணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.

டாக்டர் மீது புகார்

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் டாக்டர் சரிவர பணிக்கு வருவதில்லை என்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபு லட்சுமண், கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் மற்றும் புகாருக்குள்ளான டாக்டர் சதீஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

உரிய நடவடிக்கை

இதையடுத்து அனைத்து சுகாதார பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். வால்பாறை பகுதி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்து துணை இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறும்போது, டாக்டர்களிடமும், சுகாதார பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளேன். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் அவர், வாழைத்தோட்டம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை ஆய்வு செய்தார். மேலும் அதை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்